South India Tamil Nadu Spirituality & goodness pod Podcast
South India Tamil Nadu Spirituality & goodness pod
Adithya Raghavan
You’re infected - episode of South India Tamil Nadu Spirituality & goodness pod podcast

You’re infected

5 minutes Posted May 8, 2021 at 10:42 pm.
0:00
5:09
Download MP3
Show notes
ஶ்ரீராமஜெயம்🙏
""பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்""
காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது..
அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள். அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது. தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக்கொண்டிருந்தார்.
இப்போது வெளியில் வரட்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா? என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது.
மெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள், மகாபெரியவா முன் சென்று நின்றார்கள்.
இருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், "என்ன, ரொம்ப வலிக்கறதா? இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும்!" சொன்ன மகாபெரியவா, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு, ஏதோ சொன்னார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார். அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, "சரியா எழுதி இருக்கியா? ஒரு தரம் படிச்சுக்காமி!" என்றார்.
காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர், சத்தமாகப் படித்தார்.
""அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி---
அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ ---""
சீடர் படித்து முடித்ததும், "இது, ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம்!" சொன்ன மகாபெரியவா, "இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு? எங்கே சொல்லு பார்க்கலாம்!" என்று கேட்டார்.
"பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. இது குருவாயூரப்பனைப்பத்தினை துதி. 'பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே, பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீ. அளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்!' அப்படின்னு அர்த்தம்!"
பவ்யமாகச் சொன்னார், சீடர்.
"என்ன, ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா? இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும்!" சொல்லி மாதுளம் பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார், மகாபெரியவா.
அந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ, அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை.
இந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது.
அமைதியாக வரிசையில் நடந்து, மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள். "என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா? இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ!" ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான்.
அவ்வளவுதான், கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.
"தெய்வமே...என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம். ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாது! னு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது!" என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர்.
"இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை. அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ...ஒரு குறையும் வராது!" மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா, குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடியிருந்த பக்தர்கூட்டம், மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு, கோரஸாகக் குரல் எழுப்பியது.
ஓம் நமோ நாராயணாய🙏